“நீட் தேர்வில் அரசியல் வேண்டாம்”-ஜி.கே. வாசன் பேட்டி
நீட் தேர்வில் அரசியல் வேண்டாம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
திருப்புவனம்,
நீட் தேர்வில் அரசியல் வேண்டாம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமரை சந்தித்து 14 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் தமிழக அரசின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றும் என நம்புகிறேன். தேர்தல் வாக்குறுதியின்படி மக்கள் எதிர்பார்ப்புகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளில் குழப்பத்தை ஏற்படுத்தி மக்களுக்கு பல சிரமங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணம் என்பது தமிழகத்திற்கு பல தொழிற்சாலைகளை கொண்டுவரவேண்டும் என்று நினைப்பது எல்லோருடைய எண்ணமாகும். அதில் வெளிப்படை தன்மையோடு சந்தேகம் இல்லாமல் அரசு தங்களுடைய பணியை செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் நேர்மாறாக நடைபெறும் போது மக்களுக்கு சந்தேகம் வருகிறது.
அரசியல் வேண்டாம்
தமிழகத்தில் கவலையான விஷயம் என்னவென்றால் பெண்கள், மூதாட்டிகளிடம் நகைபறிப்பு என்பது ஒரு பொழுது போக்காக ஆகிவிட்டது. இதை இரும்பு கரம் கொண்டு அடக்குவது காவல்துறையின் கடமையாகும். இதேபோல் கிராமம் முதல் நகரம், மாநகரம் வரை போதைப்பொருட்கள் மூலம் இளைஞர்களை தவறான பாதையில் இழுக்கின்றனர். போதைப்பொருள் விவகாரத்தில் சரியாக அடையாளம் கண்டு அதன் அடிவேரை அறுத்தெறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு தனி பிரிவை ஏற்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கண்காணித்து அரசும், காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதற்கு பெற்றோர்கள், பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும். நீட் தேர்வு தொடரக்கூடியது என நினைத்து மாணவர்கள் முறையாக, சரியாக சிறப்பான முறையில் தேர்வு எழுதி அதன் அடிப்படையில் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ளவேண்டும். கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டது. கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம். இலங்கை பிரச்சினையில் நமது மீனவர்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் நீக்கப்பட்டு ராமேசுவரம், டெல்டா பகுதி மீனவர்கள் சிரமமின்றி மீன்பிடிக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சிவகங்கை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்பி உடையப்பன், வட்டார தலைவர்கள் ராஜா, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story