வங்கி மேலாளர் பேசுவதாக கூறி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி


வங்கி மேலாளர் பேசுவதாக கூறி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி
x
தினத்தந்தி 2 April 2022 6:58 PM GMT (Updated: 2 April 2022 7:58 PM GMT)

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி பெண்ணை ஏமாற்றி வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.25 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

சிவகங்கை, 
வங்கி மேலாளர் பேசுவதாக கூறி பெண்ணை ஏமாற்றி வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.25 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
ரகசிய குறியீட்டு எண்
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்த வலையராதினிபட்டியைச் சேர்ந்தவர் மேகலா(வயது 32). நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் இவருடைய செல்போனில் பேசிய ஒருவர் தான் வங்கி மேலாளர் என்றும், உங்களுடைய ஏ.டி.எம். கார்டு பிளாக் ஆகிவிட்டது. செல்போனுக்கு வரும் ஓ.டி.பி.யை (ரகசிய குறியீட்டு எண்ணை) தெரிவித்தால் ஏ.டி.எம். கார்டு மீண்டும் செயல்படும் என்றும் கூறினாராம். 
இதை உண்மை என்று நம்பிய மேகலா அவரது செல்போனுக்கு வந்த ரகசிய குறியீட்டு எண்ணை போனில் பேசியவரிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.25 ஆயிரத்தை அந்த மர்ம நபர் எடுத்துவிட்டார். 
மீட்டனர்
இதுகுறித்து மேகலா மதகுபட்டி போலீசில் புகார் தெரிவித்தார் உடனடியாக அவர்கள் சிவகங்கையில் உள்ள சைபர் கிரைம் போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் இரவு பணியிலிருந்த ஏட்டு ஸ்ரீதர், போலீஸ்காரர் சாணக்கியா ஆகியோர் விரைந்து செயல்பட்டு மேகலாவின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்த வங்கிக்கு தகவல் கொடுத்து அந்த பணத்தை உடனடியாக திரும்ப அனுப்பும்படி தெரிவித்தனர். 
இதைத்தொடர்ந்து அந்த பணம் நேற்று காலை 8 மணிக்கு மேகலாவின் வங்கிக்கணக்கில் மீண்டும் வரவானது. தொடர்ந்து இழந்த பணத்தை உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Next Story