தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 April 2022 12:32 AM IST (Updated: 3 April 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி 
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட நான்கு ரோடு செல்வாநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சியால் வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பெரியசாமி, செல்வா நகர், பெரம்பலூர்.

குறுகளாகும் தார் சாலை 
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே உள்ள கட்டிப்பாளையம் பகுதியில் இருந்து நத்தமேட்டுப்பாளையம் செல்வதற்கு புகழூர் வாய்க்காலின் வலது கரையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை வழியாக பள்ளி வாகனங்கள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கட்டிப்பாளையம் அருகே தார் சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கிணறு வெட்டி கிணற்றில் பம்புசெட் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்கடந்த சில மாதங்களாக தார் சாலையோரத்தில் இருந்த கிணற்றில் தார் சாலையின் ஓரம் இடிந்து தொடர்ந்து கிணற்றுக்குள் விழுந்து வருகிறது. இதனால் தார் சாலையின் அகலத்தில் அளவு குறைந்துள்ளது. பகல் நேரத்தில் செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். இரவு நேரத்தில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கட்டிப்பாளையம், கரூர். 

மின் விளக்கு அமைக்கப்படுமா? 
புதுக்கோட்டை நகராட்சி வள்ளியப்பாநகர்,  முத்துநகர் இணைப்பு சாலை திருப்பத்தில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மின்மாற்றியானது கடந்த கஜா புயலின்போது காற்றில் விழுந்தது. இதையடுத்து அந்த மின்மாற்றி மீண்டும் அமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. இந்த நிலையில் இப்பகுதியில் இரவு நேரத்தில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் விஷ ஜந்துக்கள் நடமாடவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வள்ளியப்பாநகர், புதுக்கோட்டை. 

வேகத்தடை அமைக்க வேண்டும்
திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து மேலபுதுவயல் ஊராட்சிக்கு பிரியும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதினால் இப்பகுதி மக்கள் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் போதிய பஸ் வசதி இல்லாததால் அலுவலக பணிக்கு செல்பவர்கள்,  பள்ளி, கல்லூரி செல்லும்  மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நௌசாத்உசேன், கீரனூர், புதுக்கோட்டை. 


சாலை வசதி வேண்டும் 
திருச்சி கம்பரசன்பேட்டை ரோஷினி கார்டன் பகுதியில் முறையாக சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் மோட்டார் சைக்கிளை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கம்பரசன்பேட்டை, திருச்சி.

மயான வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியிலுள்ள பறையர் தெருவில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என முறையான மயான வசதி இல்லாததால் இப்பகுதியில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களின் உடல்களை எரியூட்ட பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பாதையுடன் கூடிய மயான வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வைரிசெட்டிப்பாளையம், திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் முத்துராஜா தெரு, மேற்கு தெரு, குரும்பர் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வைரிசெட்டிப்பாளையம், திருச்சி. 

போக்குவரத்திற்கு இடையூறு 
திருச்சி உறையூர் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகருகே 3 மதுபானக்கடைகள் உள்ளன. இங்கு மதுவாங்க வரும் மதுப்பிரியர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை வாகனம் நிறுத்தும் இடம்போல் சாலையோரம் நிறுத்துவதினால் போக்குவரத்திற்கும், பஸ் பயணிகளுக்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  உறையூர், திருச்சி. 

மின் விசிறி இல்லாததால் மாணவர்கள் அவதி 
திருச்சி மாவட்டம், முசிறியில் சுமார்  100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்ளனர். இவர்கள் தங்களின் அறிவு திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் முசிறியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் மின்விசிறி இல்லாததால், தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மாணவர்கள் பெரும் அவதியுடன் இந்த நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படித்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த நூலகத்திற்கு மின்விசிறி வசதி ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
ஜெயக்குமார், முசிறி, திருச்சி.

குரங்குகளால் தொல்லை
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா புலிவலம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து மளிகை பொருட்கள், தின்பண்டங்களை எடுத்துச் சென்று விடுவதுடன்  வீட்டில் உள்ள பொருட்களையும் ஆங்காங்கே சிதறி அடித்துவிட்டு சென்றுவிடுகின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளை அச்சுறுத்துவதுடன் அவர்களை கடிக்க வருகிறது. எனவே இதுகுறித்து வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து சென்று வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புலிவலம், திருச்சி.



Next Story