ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியல்
அரக்கோணம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து அரக்கோணம் தாலுகா அலுவலகம் எதிரே ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து அரக்கோணம் தாலுகா அலுவலகம் எதிரே ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோழிப்பண்ணை அமைக்க பேச்சு
அரக்கோணத்தை அடுத்த வேடல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கீதா. இவரிடம், ராஜகோபால் என்பவர் கோழிப்பண்ணை அமைப்பதற்கான அனுமதி சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குச் சென்று பேசினார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கீதாவின் கணவர் மூர்த்தி, இதுசம்பந்தமாக நாளை காலை அலுவலகத்தில் வந்து பேசிக் கொள்ளலாம், எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜகோபால், மூர்த்தியை தாக்கியதாகத் தெரிகிறது.
சாலை மறியல்
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாகக் கூறி வேடல் ஊராட்சி மன்ற தலைவர் கீதாவின் கணவர் மூர்த்திக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் பலர் திரண்டு போலீசாரை கண்டித்து தாலுகா அலுவலகம் எதிரே அரக்கோணம்-திருத்தணி சாலையில் நேற்று காலை 11.15 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர்.
வெகுநேரம் காத்திருந்தனர்
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், தாசில்தார் பழனிராஜன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்ற அவர்கள் மேலும் கும்பலாக சென்று தாலுகா போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கியவர்கள் மீதான புகார் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் வரை அங்கேயே வெகுநேரம் காத்திருந்தனர்.
கைது
மூர்த்தியின் புகாரின் பேரில் 8 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் கீதாவின் கணவர் மூர்த்தியை தாக்கியதாக கூறப்படும் ராஜகோபாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்தப் புகாரில் தலைமறைவாக உள்ள மற்ற 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சாலை மறியலால் அரக்கோணம்-திருத்தணி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சாலை மறியலால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story