3 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு விதித்த ஆயுள் தண்டனை உறுதி
3 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு விதித்த ஆயுள்தண்டனை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை,
திருச்சி பாலக்கரை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். செல்போன் ரீசார்ஜ் கடை வைத்திருந்தார். இவரது மனைவி லெட்சுமிபிரபா கடையை கவனித்து வந்தார். இந்த கடையில் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த ரோஸ்லின் பாக்கியராணி என்பவர் வேலை செய்து வந்தார். கடையில் இருந்து பணத்தை திருடியதாக, அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். இதனால் ரோஸ்லின் பாக்கியராணி ஆத்திரமடைந்து, லெட்சுமிபிரபாவை பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி கடந்த 16.7.2016 அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த லெட்சுமிபிரபாவின் 3 வயது மகன் சிரீஸ் என்ற சிறுவனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி முதன்மை மாவட்ட கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், மனுதாரர் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதால் அவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story