ஆயுதப்படை போலீசார் 32 பேர் சட்டம்-ஒழுங்கு பணிக்கு மாற்றம்


ஆயுதப்படை போலீசார் 32 பேர் சட்டம்-ஒழுங்கு பணிக்கு மாற்றம்
x
தினத்தந்தி 3 April 2022 1:53 AM IST (Updated: 3 April 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஆயுதப்படை போலீசார் 32 பேர் சட்டம்-ஒழுங்கு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாரில் 32 பேர் தற்போது போலீஸ் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அவர்களில் 3 பேரை தவிர்த்து 29 பேர் குடும்ப சூழ்நிலை காரணமாக பல ஆண்டுகளாக ஆயுதப்படையில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்கள் கட்டாயமாக போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சக போலீசார் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆனால் ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாரில் 49 பேர் தங்களை போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தாகவும், அவர்களில் 3 பேர் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், 46 பேர் போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் போலீசாருக்கு வாராந்திர ஓய்வு, சிறு தண்டனைகள் ரத்து, விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் உள்ளிட்டவற்றில் போலீசார் நலனில் அக்கறை எடுத்து செயல்படும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஆயுதப்படையில் குடும்ப சூழ்நிலை காரணமாக விரும்பம் தெரிவித்து பணியாற்றி வந்த 29 போலீசாரை போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்தது, அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று சக போலீசார் தெரிவித்தனர். அவர்களுக்கு மீண்டும் ஆயுதப்படையில் பணிபுரியவும், போலீஸ் நிலையங்களில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆயுதப்படை போலீசாரை சட்டம்-ஒழுங்கும் பணிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும் என்பதே போலீசாரின் கோரிக்கையாக உள்ளது.

Next Story