பணிகளை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம்


பணிகளை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2022 1:54 AM IST (Updated: 3 April 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

பணிகளை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்த டாக்டர் அர்ச்சனா சர்மா இறப்புக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளி பிரிவு, வழக்கமான பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் இந்திய மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளையின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 45 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் பிரிவு மற்றும் வழக்கமான பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிப்படைந்தனர்.
மேலும் போராட்டத்தின் ஒரு பகுதியாக டாக்டர்கள் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளையின் தலைவர் டாக்டர் வல்லபன் தலைமை தாங்கினார். கிளையின் முன்னாள் தலைவர் செங்குட்டுவன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜூனன், இருக்கை மருத்துவ அதிகாரி டாக்டர் கலா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். கர்ப்பிணிக்கு டாக்டர் அர்ச்சனா சர்மா மருத்துவ சிகிச்சை அளித்த போது, அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்காக அந்த டாக்டர் மீது தவறான வழக்குப்பதிவு செய்த போலீசாரை கைது செய்ய வேண்டும். இதனால் மனமுடைந்த உயிரை விட்ட டாக்டரின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். நீண்ட கால கோரிக்கையான டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கோஷங்களை எழுப்பினர். முன்னதாக கிளையின் செயலாளர் டாக்டர் சுதாகர் வரவேற்றார். முடிவில் பொருளாளர் டாக்டர் சத்யா நன்றி கூறினார்.

Next Story