சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 3 April 2022 2:25 AM IST (Updated: 3 April 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சூரமங்கலம், 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவிக்கு பாலியல் தொல்லை
புதுக்கோட்டையை சேர்ந்த 26 வயதுடைய மாணவி ஒருவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் பிரேம்குமார் என்பவர் கடந்த ஓராண்டாக எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். குறிப்பாக அவர் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்தார். சாதியை சொல்லியும் திட்டினார். தொடர்ந்து அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். 
இதை வெளியே கூறினால் தேர்வில் பெயிலாக்கி விடுவேன் என மிரட்டுகிறார். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
உதவி பேராசிரியர் மீது வழக்கு
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மாணவிக்கு பட்டுக்கோட்டையை சேர்ந்த உதவி பேராசிரியர் பிரேம்குமார் (வயது 30) பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 
அதைத்தொடர்ந்து பிரேம்குமார் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, சாதியை கூறி திட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை போலீசார் தேடி வருகின்றனர். 
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story