தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது
சேலம் அஸ்தம்பட்டி 12-வது வார்டு கோர்ட்டு ரோடு காலனியில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்று நேற்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து, பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-சக்திவேல், அஸ்தம்பட்டி, சேலம்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
தர்மபுரி-சேலம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே மின்வாரிய அலுவலகம் முன்பு ஏமகுட்டியூர், வெங்கடம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை தொடங்குகிறது. சாலைகள் சந்திக்கும் இந்த பகுதியில் வாகனங்கள் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
-கண்ணன், தர்மபுரி.
சாலையில் ஆக்கிரமிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்-சக்கில்நத்தம்-மாடறஅள்ளி பிரதான சாலையில் இருந்து பிரிந்து செல்லும் ஈஸ்வரதாசரப்பள்ளி-தீத்தன் வட்டத்திற்கு செல்லும் மண் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சி.செந்தில், ஈஸ்வரதாசரப்பள்ளி, கிருஷ்ணகிரி.
சுகாதார சீர்கேடு
நாமக்கல் நகராட்சி குட்டைத்தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்து விடுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, நாமக்கல்.
பழுதடைந்த வாகனங்களால் இடையூறு
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து எருமாபாளையம் செல்லும் சர்வீஸ் சாலையின் இருபுறமும் பழுதடைந்த வாகனங்கள் மாதக்கணக்கில் அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சீலநாயக்கன்பட்டி, சேலம்.
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வெளியூரில் இருந்து வருபவர்களும் அவதிப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-தனசேகர், பாளையம்புதூர், தர்மபுரி.
குப்பை தொட்டி வைக்க வேண்டும்
சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகிலேயே அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் முகம் சுழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெருமாள், சேலம்.
Related Tags :
Next Story