பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நேற்று சேலம் 5 ரோடு அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகராஜா முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு பாடையில் மொபட் ஒன்றை வைத்து அதற்கு மாலையிட்டு வெள்ளை துணியால் மூடி வைத்தனர். பின்னர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பெண்கள் அந்த பாடையை சுற்றி வந்து ஒப்பாரி வைத்து அழுதனர். இதையடுத்து அந்த சாலையில் கட்சியினர் பாடையை தூக்கிக்கொண்டு சென்றனர்.
அப்போது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், குழந்தைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலகம்
இதே போல சேலம் கிழக்கு பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு பகுதி செயலாளர் பொன்ரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, குணசேகரன், ராமமூர்த்தி, மாநகர குழு உறுப்பினர் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சூரமங்கலம், மேச்சேரி ஆகிய பகுதிகளிலும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story