சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில், 6-ந் தேதி நடக்கிறது: காவடி பழனியாண்டவர் ஆசிரம கும்பாபிஷேகம் முதல் கால பூஜையுடன் இன்று தொடங்குகிறது
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 7 நிலை ராஜ கோபுர கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
சேலம்,
காவடி பழனியாண்டவர் ஆசிரமம்
சேலம் ஜங்ஷன் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் ஸ்ரீ காவடிபழனியாண்டவர் ஆசிரமம் உள்ளது. இங்கு வள்ளி -தேவசேனா சமேத காவடி பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த ஆசிரமத்தில் 7 நிலை ராஜகோபுரம் மற்றும் புதிய சன்னதிகள் கும்பாபிஷேகம் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
இங்கு ஆலய வரலாற்றில் முதன்முதலாக 108 லட்சுமி சன்னதிகள், மேதா சரஸ்வதி, வாஸ்து பிரம்மா, ஐஸ்வர்யேஷ்வரர், சித்திர லேகா சமேத லட்சுமி குபேரர், சங்கநிதி, பதுமநிதி, அஷ்ட சக்திகள், ராகு கால துர்க்கை (சண்டி), சத்தியவான் எமதர்மராஜா, சித்ர குப்தன், ஸ்ரீ குரு சீரடி சாய் பாபா நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் காண்கின்றது. இந்த புதிய சன்னதிகளுடன், ஆசிரம பிரதான தெய்வமான வள்ளி-தேவசேனா சமேத காவடி பழனியாண்டவர் கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இந்த விழாவையொட்டி, 164 ஹோம குண்டங்கள் அமைத்து 200 வேத விற்பன்னர்களால் 6 கால யாக பூஜையுடன் இந்த கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் வள்ளி-தேவசேனா காவடி பழனியாண்டவருக்கு அதிகபட்சமாக 33 குண்டங்கள் அமைத்து யாகம் நடைபெற உள்ளது.
ராஜ அலங்காரம்
விழாவின் தொடக்கமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சுப்ரபாதம், கோ மாதா பூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதையடுத்து 8 மணிக்கு அன்னதானமும், தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கோமாதா பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை நடக்கிறது. இந்த மூன்றிலும் பசுவின் பின்பாகத்திலும், குதிரையின் முகத்திலும், யானையின் மத்தகத்திலும் அமைந்திருக்கும் லட்சுமிக்கு பக்தர்கள் பூஜை செய்வார்கள்.
காலை 11 மணிக்கு சரவண பொய்கையில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. அதன்பிறகு ஆன்மிக பஜனை பாடல்கள், சொற்பொழிவு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு காவடி பழனியாண்டவருக்கு முதல் கால யாக பூஜை 200 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க தொடங்குகிறது. இதில் பெங்களூரு மதுக்கரா சாமிகள் பங்கேற்கிறார். இரவில் திருப்புகழ் பாராயணம், அன்னதானம் மற்றும் சினிமா மெல்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து இரு நாட்கள் யாககால பூஜையும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கின்றன.
கும்பாபிஷேகம்
வருகிற 6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு காவடி பழனியாண்டவருக்கு 6-ம் கால யாகபூஜை நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு ராஜகோபுரம் சகல விமானங்கள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து 7 மணிக்கு அன்ன கொடி ஏற்றிஅன்னதானம் தொடங்கப்பட்டு அன்று மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவின் சிகரநிகழ்ச்சியாக காவடி பழனியாண்டவர் மற்றும் சகல தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அப்போது காவடி பழனியாண்டவருக்கு ஸ்வர்ண முருகன் அலங்காரமாக தங்க கவசம் சாத்துப்படி நடக்கிறது.
காலை 8 மணிக்கு பக்தி சொற்பொழிவும், 11 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத காவடி பழனியாண்டவருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு தாம்பூலம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து நாட்டியாஞ்சலி, பக்தி இசை கச்சேரி நடக்கிறது.
நிறைவாக இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடக்கிறது. சங்கர சர்மா, ராஜே ஷ் ஆகிய சிவாச்சாரியர்கள் நடத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், எஸ்.செல்வி செய்துள்ளனர்.
Related Tags :
Next Story