புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு
பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து இரவு நேரங்களில் பவானி ஆற்றில் சாய்க்கழிவுகளை கலந்து விடுகிறார்கள். இதனால் ஆற்று நீர் மாசுபட்டு வருகிறது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பவானி ஆற்றில் சாயக்கழிவுகளை கலப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காடையாம்பட்டி
அறிவிப்பு பலகை
ஈரோடு திண்டல் அருகே திருச்செங்கோடு-நாமக்கல் செல்லும் ரிங் ரோடு உள்ளது. இங்கு எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. அதனால் வாகன ஓட்டிகள் பாதை மாறி சென்றுவிடுகிறார்கள். இதேேபால் இங்கு மின்விளக்கு வசதியும் இல்லை. அதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே ரிங் ரோடு அருகே அறிவிப்பு பலகை வைத்து, மின்விளக்கு வசதி செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.
ரகுபதி, ஈரோடு.
உடைந்து தொங்கும் மின்கம்பம்
பருவாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன்பாளையத்தில் தொடக்கப்பள்ளி அருகே ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் மேல் பகுதி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இடையில் உள்ள ஒரு கம்பியின் வலுவில் உடைந்த பகுதி இருக்கிறது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் மின்வாரிய அதிகாரிகள் இதை விரைந்து சரிசெய்வார்களா?
பொதுமக்கள், அம்மன்பாளையம்.
தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்
ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் சிறிய வாய்க்கால் போன்ற நீர்வழித்தடம் உள்ளது. இதில் குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் கொண்டு வந்து கொட்டியுள்ளார்கள். இதனால் அந்த வழியாக தண்ணீர் செல்ல முடியவில்லை. மேலும் துர்நாற்றம் வீசியபடி சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சுத்தப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாஸ்திரி நகர்.
குப்பையால் சுகாதாரக்கேடு
கோபி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுவளவு சுப்பணன் வீதி முதல் குறுக்கு தெருவில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றிலும், அதன் அருகிலும் குப்பைகளை கொண்டு வந்து குவித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் பாழடைந்த கிணற்றுக்கு மூடி போட்டு, அந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், மேட்டுவளவு.
வழி நெடுகிலும் குப்பை
ஈரோட்டை அடுத்துள்ள சோலாரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தாண்டி ஈரோடு-கரூர் ரோட்டின் கிழக்கு புறம் வழி நெடுகிலும் குப்பை மேடாக காட்சி தருகிறது. வெளியில் இருந்து அங்கு கொண்டுவந்து குப்பைகளை கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டு ஓரம் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கம், சோலார்.
கால்நடைகளுக்கு தண்ணீர் வசதி
அந்தியூரில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு 2 நாட்கள் மாட்டு சந்தை நடைபெறும். வெளியூர்களில் இருந்து ஏராளமான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் சந்தையில் கால்நடைகளுக்கு முறையான தண்ணீர் வசதி இல்லை. கொளுத்தும் கோடை வெப்பத்தில் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் தவிக்கின்றன. அதனால் சந்தை நிர்வாகிகள் உடனடியாக கால்நடைகளுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்.
தூர்வாரப்படுமா?
அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சி ஜி.எஸ். காலனியில் கடந்த 3 மாதங்களாக சாக்கடை தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமும் பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்ப்பொதுமக்கள், ஜி.எஸ்.காலனி.
Related Tags :
Next Story