தலைவாசல் அருகே கிணற்றில் நிர்வாண நிலையில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


தலைவாசல் அருகே  கிணற்றில் நிர்வாண நிலையில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 April 2022 3:48 AM IST (Updated: 3 April 2022 3:48 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே கிணற்றில் நிர்வாண நிலையில் பெண் பிணம் மிதந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைவாசல், 
கிணற்றில் பெண் பிணம்
தலைவாசல் அருகே உள்ள பகடப்பாடி பகுதியை சேர்ந்தவர் அசோகன். விவசாயி. இவருடைய முதல் மனைவி விஜயா (வயது 37). 2-வது மனைவி செல்வராணி (35). இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வராணி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 
இதனிடையே நேற்று காலை அசோகன் தோட்டத்துக்கு அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டத்து கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அந்த தோட்டத்து உரிமையாளரின் மகன் சரவணன் என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் ஒரு பெண் பிணமாக மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீரகனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
நிர்வாண நிலையில்...
அதன் பேரில் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், வீரகனூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து பார்த்தனர். அப்போது கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் பிணம் மிதந்ததை கண்டனர். மேலும் கிணற்றில் பிணமாக மிதந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தது, காணாமல் போன அசோகனின் 2-வது மனைவி செல்வராணி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், செல்வராணி கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. 
உடைந்த வளையல்கள்
மேலும் அவர் பிணமாக கிடந்த கிணற்றின் அருகில் ஓடையும், ஏரியும் உள்ளது அந்த பகுதிக்கு மது குடிக்க அடிக்கடி பலர் வருவார்கள். மேலும் ஓடை பகுதியில் வளையல்கள் உடைந்து கிடந்தன. இதனால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது என்று கூறினார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story