தூத்துக்குடியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பலி


தூத்துக்குடியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
x
தினத்தந்தி 3 April 2022 5:45 PM IST (Updated: 3 April 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக பலியானார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
9-ம் வகுப்பு மாணவர்
தூத்துக்குடியை அடுத்த முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் சுடலை (வயது 15). இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் பகலில் அப்பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் பக்கத்து ஊரான அத்திமரப்பட்டியை அடுத்த குலையன்கரிசல் குளத்தில் குளிக்க சென்றார்.
குளத்தில் மூழ்கி...
அங்கு குளத்தில் குளித்தபோது சுடலை எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்கள் அச்சத்தில் வீட்டுக்கு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாலையில் நீண்ட நேரமாகியும் சுடலை வீடு திரும்பாததால், அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சுடலை நண்பர்களுடன் குலையன்கரிசல் குளத்தில் குளிக்க சென்றது தெரியவந்தது. உடனே அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் தேடியபோது இரவானதால் சுடலையை பற்றிய விவரம் தெரியவில்லை.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் நேற்று காலையில் குளத்தில் சுடலை பிணமாக மிதந்தார். உடனே புதுக்கோட்டை போலீசார் மற்றும் பொதுமக்கள் சுடலையின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story