எடப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவரின் அதிகாரம் தற்காலிக ரத்து


எடப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவரின் அதிகாரம் தற்காலிக ரத்து
x
தினத்தந்தி 3 April 2022 6:00 PM IST (Updated: 3 April 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்ததாக எழுந்த புகார் காரணமாக எடப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவரின் அதிகாரம் தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

குன்னூர்

ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்ததாக எழுந்த புகார் காரணமாக எடப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவரின் அதிகாரம் தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
 
எடப்பள்ளி ஊராட்சி 

நீலகிரி மாவட்டடம் குன்னூர் அருகே எடப்பள்ளி ஊராட்சி மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவராக முருகன், துணைத் தலைவராக கோபால்ராஜ் உள்ளனர்.
இந்த நிலையில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஊராட்சியின் காசோலை மற்றும் பண பரிவர்த்தனைகளில் 2-ம் நிலை கையெழுத்திடும் தகுதியை தற்காலிகமாக ரத்து செய்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-
எடப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி நிர்வாகத்தில் எந்த பணியும் செய்யவிடாமலும், ஊராட்சி பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதிய தொகை வழங்கவும், மின் விளக்கு மற்றும் உதிரி பாகங்களுக்கான தொகை விடுவிக்க காசோலை மற்றும் பண பரிவர்த்தனையில் கையெழுத்திடாமல் இருந்துள்ளார். 

விசாரணை அறிக்கை

மேலும் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்ததோடு, ஊராட்சிமன்ற தலைவரையும் உறுப்பினர்களையும் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இது தொடர்பாக கடந்த 31.12.2021 அன்று சிறப்பு ஊராட்சி கூட்டம் நடத்தப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
மேற்கண்ட புகார்கள் தொடர்பாக மாவட்ட வளர்ச்சி முகமையின் உள்கட்டமைப்பு உதவித் திட்ட அலுவலர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரைண அறிக்கை பெறப்பட்டு துணைத் தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதில் அவர் அளித்த விளக்கம் போதுமானதாகவும் ஏற்க தக்கதாகவும் இல்லை. 

தற்காலிக ரத்து

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஊராட்சி துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமான ஊராட்சி நிதி நிர்வாக செயல்பாட்டில் 2-ம் நிலை காசோலை மற்றும் பண பரிவர்த்தனைகளில் கையொப்பமிடும் அதிகாரத்தை தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டு உள்ளது.. இந்த பணியினை குன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 


Next Story