தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் வாலிபர் குத்திக்கொலை
தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
தேவதானப்பட்டி:
கோவில் திருவிழா
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). இதே ஊரை சேர்ந்தவர் தனுஷ் (23). இருவரும் மீன் விற்பனை செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. கடந்த ஆண்டு இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது 2 பேரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்றும், இன்றும் காமக்காபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி இன்று அம்மன் கரகம் முளைப்பாரி ஊர்வலத்துடன் சென்று ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கத்திக்குத்து
இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் விக்னேஷ் மற்றும் தனுஷ் உள்பட பலர் நடனமாடிக்கொண்டு வந்தனர். இதில் தனுசுக்கும், விக்னேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. அப்போது விக்னேஷ் ஆத்திரமடைந்து திடீரென பீர்பாட்டிலால் தனுசின் மண்டையில் அடித்தார்.
இதையடுத்து தனுஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேசை குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். அப்போது விக்னேசின் தம்பி தீபன்(20) தடுக்க முயன்றார். அப்போது அவரையும் தனுஷ் தாக்கினார்.
கைது
இதனால் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விக்னேசை அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தீபன் பெரியகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்தனர்.
கோவில் திருவிழாவில் நடந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story