270 அடி நீள காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து


270 அடி நீள காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 3 April 2022 9:23 PM IST (Updated: 3 April 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில், 270 அடி நீள காற்றாலை இறக்கையை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில், 270 அடி நீள காற்றாலை இறக்கையை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காற்றாலை இறக்கைகள்
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்குள்ள காற்றாலைகளுக்கு தேவையான மின்சார உதிரி பாகங்கள், காற்றாலை இறக்கை, எந்திரம் உள்ளிட்டவை வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து ராட்சத லாரிகள் மூலம் காற்றாலை மின் உற்பத்தி நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி சென்னையில் இருந்து 270 அடி நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு 3 லாரிகள், ஒன்றன்பின் ஒன்றாக தூத்துக்குடி நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டது.
ஆபரேட்டர் அறை
ஒவ்வொரு லாரியும் தலா ஒரு காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு சென்றன. இந்த லாரிகள், சுமார் 300 அடி நீளம் கொண்டது ஆகும். இதனால் வளைவுகளில் லாரியை எளிதாக திருப்ப முடியாது.
இதனால் வளைவுகளில் திருப்புவதற்காக லாரியின் பின்பகுதியில், 180 அடி தூரத்தில் ஆபரேட்டருக்கு என்று தனி அறை உள்ளது. அதில் ஆபரேட்டர் ஒருவர் அமர்ந்து, முன்பக்க டயர்கள் திரும்புவதை பார்த்து ‘ரிமோட்’ மூலம் பின்பக்க டயரை இயக்குவார். இதன்மூலம் வளைவு பகுதியில் லாரியை டிரைவரும், ஆபரேட்டரும் பாதுகாப்பாக திருப்புவார்கள்.
லாரி கவிழ்ந்து விபத்து
இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் அந்த 3 லாரிகளும் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தன. திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள வளைவில் முதல் 2 லாரிகள் பாதுகாப்பாக திரும்பி சென்றன.
ஆனால் 3-வதாக பின்னால் வந்த லாரியை டிரைவர் வளைவில் திருப்ப முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட ராட்சத காற்றாலை இறக்கை பயங்கர சத்தத்துடன் சரிந்தது.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டது  போன்று அப்பகுதியில் உணரப்பட்டது. மேலும் லாரியின் முன்பகுதியில் இருந்த என்ஜின் மற்றும் பின்பகுதியில் இருந்த ஆபரேட்டர் பகுதி ஆகியவை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் ஆபரேட்டர் காயமின்றி உயிர்தப்பினர். லாரி கவிழ்ந்ததால் நான்கு வழிச்சாலையின் ஒரு புறத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீரமைத்தனர்.
 காரணம் என்ன?
விபத்து தொடர்பாக லாரியை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த டிரைவர் ராமநாதன், ஆபரேட்டராக பணியாற்றிய உத்தரபிரதேசத்தை  சேர்ந்த   சூரத் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், நான்கு வழிச்சாலை வளைவில் வந்தபோது, லாரியின் முன்பக்க டயர்கள் திரும்புவதற்கு ஏற்றாற்போல் பின்பக்க டயர்களை திருப்புவதற்காக ஆபரேட்டர் அறையில் இருந்த சூரத் எந்திரத்தின் ‘ரிமோட்’டை இயக்கினார்.
ஆனால் ரிமோட் வேலை செய்யவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது தெரியவந்தது. இருப்பினும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மதுரையில் இருந்து பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த லாரி மற்றும் ராட்சத காற்றாலை இறக்கையை மீட்கும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story