மாசு கட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்களுடன் நேரடி கலந்தாய்வு


மாசு கட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்களுடன் நேரடி கலந்தாய்வு
x
தினத்தந்தி 3 April 2022 9:39 PM IST (Updated: 3 April 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் ஒவ்வொரு மாதமும் 5-ந்தேதி பொதுமக்களுடன், மாசு கட்டுப்பாடு தொடர்பாக நேரடி கலந்தாய்வு நடைபெறும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

வெளிப்பாளையம்:
நாகையில் ஒவ்வொரு மாதமும் 5-ந்தேதி பொதுமக்களுடன், மாசு கட்டுப்பாடு தொடர்பாக  நேரடி கலந்தாய்வு நடைபெறும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலந்துரையாடல்
தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல், கண்காணித்தல், மாசு தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முக்கியமான செயல்பாடுகளாகும். இந்த செயல்பாடுகளில் பெரும்பாலானவை கடந்த சில ஆண்டுகளாக இணையவழி மூலமாக செயல்படுத்தப்படுவதால், பொதுமக்கள், தொழில்முனைவோருடன் நேரடி கலந்துரையாடல் மிகவும் குறைந்துள்ளது. 
நேரடி கலந்துரையாடல் மட்டுமே பொதுமக்கள், தொழில் முனைவோருடன் புரிதல் மற்றும் அதிக நம்பிக்கையை உருவாக்க முடியும். எனவே மாசு கட்டுப்பாடு வாரியம், நேரடி கலந்தாய்வு அமர்வு நடத்த முன்வந்துள்ளது. 
5-ந்தேதி நடக்கிறது
தனிநபர்கள், தொழிற்சாலைகள், தன்னார்வதொண்டு நிறுவனங்கள், பொது நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள, மாசு தொடர்பான பிரச்சினைகள், இசைவாணைகள் குறித்து புகார் செய்ய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள், கருத்துக்களை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை சந்திக்கலாம். 
இந்த நேரடி கலந்தாய்வு அமர்வு ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி காலை 11 மணி அளவில் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும், தலைமை அலுவலகங்களிலும் நடைபெறும். 5-ந் தேதி விடுமுறையாக இருந்தால் அடுத்த வேலைநாளில் நடைபெறும். 
பதிவு செய்ய வேண்டும்
நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்கள் வருகையை, மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையவழி செயலியான www.tnpcb.gov.in என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  கலந்துரையாடலில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும். 
 மேலும் இதுதொடர்பான தகவலுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்யப்படும் மாசுகட்டுப்பாடு வாரிய நாகை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story