அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணைய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்ட செயலாளர் பேச்சு
அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பேசினார்.
தேனி:
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில், சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சையது கான் பேசும்போது, "அ.தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகள் இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். அ.தி.மு.க. 3 பெரிய தோல்விகளை சந்தித்துள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கட்சி உடைந்தது. அப்போது பெரும் தோல்வி அடைந்தோம். மறுபடியும் கட்சிகள் இணைந்ததால் வெற்றி வசமானது. ஜெயலலிதா இறந்த பின் என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும். பிரிவினை இருந்தால் வெற்றி பெற முடியாது. தலைவர்கள்தான் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்" என்றார்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "மாவட்ட செயலாளர் எழுச்சியான, உணர்வுப்பூர்வமான உரை ஆற்றியுள்ளார். தாலிக்கு தங்கம், அம்மா கிளினிக் ஆகிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. 'நீட்' தேர்வு ரத்து நாடகம் இன்றும் தொடர்கிறது. 10 ஆண்டுகளாக மின் தடை இல்லை. இப்போது மின் வெட்டு அதிகம் உள்ளது. அ.தி.மு.க.வை அசைக்கும் தெம்பு எந்த கட்சிக்கும் இல்லை" என்றார்.
Related Tags :
Next Story