என்ஜினீயரை தாக்கி மனைவியிடம் 11 பவுன் நகை பறிப்பு


என்ஜினீயரை தாக்கி மனைவியிடம் 11 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 April 2022 10:39 PM IST (Updated: 3 April 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற என்ஜினீயரை தாக்கி அவரது மனைவியிடம் 11 பவுன் நகைகளை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகி்ன்றனர்.

திருவாரூர்:
திருவாரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற என்ஜினீயரை தாக்கி அவரது மனைவியிடம் 11 பவுன் நகைகளை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகி்ன்றனர். 
11 பவுன் நகை பறிப்பு 
திருவாரூர் துர்காலயா சாலையில் தையல் கடையில் வேலை பார்த்து வருபவர் கருப்பூர் கிராமத்தை சேர்ந்த மேகலா (வயது48). இவரது கணவர் வீரராகவன் (55). கட்டுமான என்ஜினீயர். நேற்றுமுன்தினம் இரவு திருவாரூரில் தையல் கடையை பூட்டிவிட்டு வீரராகவன் மேகலாவை அழைத்து கொண்டு தனது ஸ்கூட்டரில் கருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அலிவலம் பகுதி அருகே சென்றபோது முகமூடி அணிந்து வந்த 6 பேர்  கும்பல் வீரராகவனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு, மேகலா கழுத்தில் கிடந்த 11 பவுன் நகைகளை பறித்து சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த வீரராகவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர்  உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 வலைவீச்சு
இதன்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரராகவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை தேடிவருகின்றனர். 
அலிவலம் பகுதியில் வழிநெடுகிலும் மின்விளக்கு இல்லாத சூழலை பயன்படுத்தி இந்த நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக திருட்டு மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story