ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் கைது


ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 10:44 PM IST (Updated: 3 April 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமேசுவரம், 
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
கச்சத்தீவு
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். 
இதில் தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியை சேர்ந்த மார்க்கோ போலோ என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் ஜெயமாலா டார்சன் (வயது 32), செல்வரஸ்கின் (30), டொரின் (42), சீமோன் ராஜ் (36), நம்புராஜன் (33), இனிக்கோ (33), பாலமுருகன், சிரிஸ் டென்னிஸ், குணா, முனியசாமி, நம்பு முருகன், மரியதியோன் ஆகிய 12 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
12 பேர் கைது
இந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். 
அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்களையும் கைது செய்து, படகையையும் கைப்பற்றி யாழ்ப்பாணம் மயிலட்டி கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அதன்பின்னர் மீனவர்கள் 12 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் வருகிற 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
பதற்றம்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடுத்தடுத்து கைது செய்து வரும் சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் இடையே பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story