குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பலி


குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
x
தினத்தந்தி 3 April 2022 10:49 PM IST (Updated: 3 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே தங்கை காதணி விழாவிற்கு வந்த போது குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாபமாக இறந்தனர்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே தங்கை காதணி விழாவிற்கு வந்த போது குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாபமாக இறந்தனர். 
காதணி விழா 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பசுபதி. அரசு போக்குவரத்துக்கழக ஊழியர். இவரது மகன் ஹரிநாத் (வயது 19). இவர் டிப்ளமோ படித்துவிட்டு சென்னையில் உள்ள தனது  பாட்டி வீட்டில் வசித்து வந்தார். பசுபதியின் தம்பி தமிழரசன் மகன் ஷியாம் குமார்(17). பட்டதாரி. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருத்துறைப்பூண்டியில் நடக்க இருந்த பசுபதியின் மகள் பவதாரணி காதணி விழாவிற்கு ஹரிநாத், ஷியாம்குமார் ஆகியோர் வந்திருந்தனர். 
குளத்தில் மூழ்கி சாவு 
அப்போது நெடும்பலம் வடக்கு தெரு பகுதியில் உள்ள பள்ளியப்பன் குளத்திற்கு 2 பேரும் குளிக்க சென்றனர். நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் குளத்திற்கு சென்று தேடினர். அப்போது குளக்கரையில் 2 பேரின் உடைகள் இருந்தன. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி 2 பேரையும் தேடினர். அப்போது 2 பேரும் குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. 
விசாரணை 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிநாத், ஷியாம்குமார் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பசுபதி, தமிழரசன் ஆகியோர் தனித்தனியாக திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கை காதணி விழாவிற்கு வந்த போது குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story