300 கிலோ கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது


300 கிலோ கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 10:58 PM IST (Updated: 3 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரிய கடல்வாழ் உயிரினங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் அட்டை, கடல் பசு, கடல் குதிரை உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் அதிகமான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 
 இந்த அரிய கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் குறிப்பாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை ஒரு சிலர் தொடர்ந்து பிடித்து கடத்தல் ஏஜெண்டுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி வருவதும் தொடர்கிறது.
ரோந்து
இந்தநிலையில் ராமேசுவரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
அதைதொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்- இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான கடலோர போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
கைது
அப்போது கடற்கரை அருகே உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த 13 பிளாஸ்டிக் கேனை சோதனையிட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் சுமார் 300 கிலோ இருப்பது தெரியவந்தது. அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கடலோர போலீசார் அதை பிடித்து வந்ததாக ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த செல்வம், பிரவுன்ராஜ், தீபக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை மண்டபம் வனச்சரக அலுவலகத்தில் கடலோர போலீசார் ஒப்படைத்தனர். 
ராமேசுவரத்தில் கடலோர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Next Story