பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு
சீர்காழியில் உள்ள பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி, ஏப்.4-
சீர்காழியில் உள்ள பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாசன வாய்க்கால்கள்
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கழுமலையாறு பாசன வாய்க்கால், திருத்தோணிபுரம் பாசன வாய்க்கால், வைத்தீஸ்வரன் கோவில் திருநகரி பாசன வாய்க்கால், கொள்ளிடம் ராஜன் வாய்க்கால், புது மண்ணியாறு பாசன வாய்க்கால், பெரப்பன்னி வாய்க்கால், பாப்பான் ஓடை வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய பாசன வாய்க்கால்கள் மற்றும் ஆறுகள் உள்ளன. இந்த பாசன வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளை நம்பித் தான் இப்பகுதி விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட வாய்க்கால் பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் வாய்க்கால்களில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். இதனால், பாசன வாய்க்கால் முழுவதும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பாசன வாய்க்கால்களில் குப்பைகள் அதிகளவு கொட்டப்படுவதால் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கிறது.
நோய்கள்
இந்த சாக்கடை தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை உள்ளது. பொதுமக்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேற்கண்ட பாசன வாய்க்கால்களில் கழிவுநீரை விடுபவர்கள் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீர்காழி பகுதியில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் சுத்தமாக சென்றது. இதனால், விவசாயமும் நன்றாக இருந்தது. தற்போது அனைத்து பாசன வாய்க்கால்களிலும் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் சரிவர செய்ய முடிவதில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story