தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 April 2022 11:10 PM IST (Updated: 3 April 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் பகுதி

 கால்வாய் கழிவை அகற்ற வேண்டும்

வேலூர் கொசப்பேட்டை கொசத்தெருவில் உள்ள கால்வாயில் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அந்தக் கால்வாயின் கழிவுகளை தெருவோரம் குவித்து வைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. தெருவில் உள்ள கால்வாய் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  -தினேஷ், வேலூர்.

 கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்

  வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 18-வது வார்டு அம்பேத்கர்நகர் சவுக்ரோடு தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டக்கோரி பல முறை நகராட்சிக்கு மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் கால்வாய் கட்ட முன் வர வேண்டும்.
  -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

 கழிவுநீரை அகற்ற வேண்டும்

  ஆற்காடு அருகே தாஜ்புரா ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அதை, பஞ்சாயத்து நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -சிவக்குமார், ஆற்காடு.

 6 மாதமாக அவதிப்படும் மக்கள்

  வேலூர் சத்துவாச்சாரி குரு தோப்பு பகுதியில் பாரதிநகர் உள்ளது. இங்குள்ள 6-வது தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இன்னும் பணிகளை முடிக்காமல், பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல வசதியும் செய்யப் படாததால் பெரும் அவதிப்படுகிறார்கள். விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது கேள்வியாக உள்ளது.
  -குருமூர்த்தி, வேலூர்.

 பணிகள் விரைவாக நடக்குமா?

  வேலூரை அடுத்த தமிழ்நாடு விட்டு வசதி வாரிய அலுவலகம் அருகே நீண்ட நாட்களாக கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. கான்கிரீட் அமைக்கக் கட்டப்பட்ட கம்பிகள் நீண்டு கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளன. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கால்வாய் பணிகளை விரைவாக முடிப்பார்களா?
  -ராஜகோபால், வேலூர்.

போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

  வேலூர் வள்ளலார் பகுதியில் சவுத் அவென்யூ சாலை உள்ளது. இங்குள்ள பீடி தொழிலாளர் மருத்துவமனை அருகே 2 அரசு குடியிருப்பு வீடுகள் பயனற்று, பாழடைந்து உள்ளன. இங்கு சமூக விரோத செயல்கள் நடப்பதைத் தடுக்க, காவல் துறை எச்சரிக்கை வாசகம் எழுதி உள்ளது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் விஷமிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பொதுமக்கள் அச்சத்தைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -விவேக், வேலூர்.

 மாத கணக்கில் வீணாகும் தண்ணீர்

  வேலூர் அருகே வள்ளலார் பகுதியில் பேஸ் 1-ல் 15-வது சாலை உள்ளது. இங்கு தனியார் மருத்துவமனை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாகத் தொடர்ந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -பாலசுப்பிரமணியம், வள்ளலார்.
  

நிரம்பி வழியும் குப்பைகள்

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் மோட்டூரில் உள்ள வேகத்தடை அருகில் குப்பைத்தொட்டி உள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. அதை யாரும் அப்புறப்படுத்தவில்லை. குப்பைகள் காற்றில் பறந்து செல்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வேண்டும்.

  -கந்தன், கொடைக்கல்.

 பழுதான சிறுமின்விசை தொட்டி

  திருப்பத்தூர் மாவட்டம் காவலூரை அடுத்த சத்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் வழியில் சிறு மின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்துள்ளது. அப்பகுதியில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. பழுதான தொட்டியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
  -பரமசிவம், காவலூர்.

  
  


Next Story