1½ கிலோ கஞ்சா எண்ணெய்யுடன் கேரள வாலிபர் கைது


1½ கிலோ கஞ்சா எண்ணெய்யுடன் கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 11:12 PM IST (Updated: 3 April 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் 1½ கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரள மாநில வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தப்பி ஓடிய ஏர்வாடி நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் 1½ கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரள மாநில வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தப்பி ஓடிய ஏர்வாடி நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
வாகன சோதனை
ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே கேட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து வந்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் அழைத்தனர். 
போலீசாரை கண்டதும் அதில் ஒருவர் தப்பி ஓடவே மற்றொருவரை மடக்கி பிடித்த போலீசார் அவர் வைத்திருந்த மஞ்சள் நிற பையை வாங்கி சோதனையிட்டனர். அப்போது அதில் பாலிதீன் கவரில் எண்ணெய் போன்ற பிசுபிசுப்பு தன்மையுடன் கூடிய பொருள் இருந்தது. அது என்ன என்று கேட்டபோது கசடு எண்ணெய் என தெரிவித்ததால் சந்தேகமடைந்து அதனை முகர்ந்து பார்த்தபோது கஞ்சா என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரித்தபோது கஞ்சா எண்ணெய் என்றும், தனது நண்பர் விற்பனைக்காக கொண்டு வந்ததாகவும், தான் உடன் வந்ததாகவும் கூறினார்.
அதிர்ச்சி தகவல் 
அந்த எண்ணெய்யை பரிசோதித்தபோது அது கஞ்சாவில் இருந்து உருக்கி எண்ணெய்யாக தயாரித்து இருப்பதும், அதனை சிகரெட் போன்றவற்றில் தடவி குடித்தால் அதிக போதை தரும் என்றும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. 
இதைதொடர்ந்து 1 கிலோ 360 கிராம் கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக திருவனந்தபுரம் நெடுமங்காடு அட்டின்புரம் கிராமம் பனையில்வீடு பகுதியை சேர்ந்த ஷெபீக் (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி அதை விற்பனைக்காக கொண்டு வந்த ஏர்வாடி முத்தரையர் நகர் முகம்மது ஜாவித் ரகுமானை தேடி வருகின்றனர். இந்த கஞ்சா எண்ணெய்யை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 
பொதுவாக 10 கிலோ கஞ்சாவை உருக்கி தயார் செய்தால் ஒரு கிலோ கஞ்சா எண்ணெய் கிடைக்கும் என்றும், இது ஒரு கிலோ சீசன் காலத்தில் ரூ.5 லட்சம், சீசன் இல்லாத காலங்களில் ரூ.10 லட்சம் வரை விலை போகும் என்றும் விசாரணையில் தெரியவந்தது. 
அதிக லாபம்
கஞ்சாவாக விற்பனை செய்தால் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் குருடு ஆயில் போன்ற இந்த கஞ்சா எண்ணெய்யை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைப்பதால் தற்போது பலர் இந்த விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய ஏர்வாடியை சேர்ந்த முகம்மது ஜாவித் ரகுமான் கிடைத்தால் இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்பதால் அவரை தேடி தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

Next Story