விடுமுறை நாளில் சுற்றுலாதலங்களுக்கு படையெடுத்த மக்கள்


விடுமுறை நாளில் சுற்றுலாதலங்களுக்கு படையெடுத்த மக்கள்
x
தினத்தந்தி 3 April 2022 11:51 PM IST (Updated: 3 April 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

விடுமுறை நாளான நேற்று சுற்றுலாதலங்களுக்கு மக்கள் படைெயடுத்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

திருவட்டார்:
விடுமுறை நாளான நேற்று சுற்றுலாதலங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தண்ணீர் குறைந்தது
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பி வருகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள விடுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்து காலை, மாலை என தொடர்ந்து குளித்து மகிழ்வதை காண முடிந்தது. இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் பார்த்து ரசித்தனர். கோதையாற்றில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியிலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தண்ணீர் பாய்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தண்ணீர் விழும் பகுதிகளில் முண்டியடித்து கொண்டு குளிப்பதை காண முடிந்தது.
திடீர் மழை
மேலும் மாலையில் திடீரென மழை பெய்ததால் அருவியிலும், மழையிலும் நனைந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டனர்.
அருவியின் மேல் பகுதியில் அணைக்கட்டில் படகு சவாரி தற்போது செயல்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமுடன் திரும்பிச் சென்றனர். நேற்று பஸ், வேன், கார்களில் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். மேலும் குருசு மலைக்கு செல்லும் பக்தர்கள் திற்பரப்புக்கு அதிக அளவில் வருகை தந்திருந்தனர். நேற்று வாகனங்கள் அதிக அளவில் திற்பரப்புக்கு வந்ததால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மொத்தத்தில் திற்பரப்பு களை கட்டியது. 
மாத்தூர் தொட்டிப்பாலம்
ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. 1,240 அடி நீளம் 103 அடி உயரம் கொண்ட மாத்தூர் தொட்டிப்பாலத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைவரை நடந்து செல்வது ஒரு திரில்லிங்கான அனுபவம் என்பதால் சுற்றுலா பயணிகள் நேற்று தொட்டிப்பாலத்துக்கு ஏராளாமானோர் படைஎடுத்திருந்தனர். 
பாலத்தினூடே நடந்து பாலத்தை சுற்றி வளர்ந்திருக்கும் மரங்களையும், பரளியாற்றையும் பார்த்து ரசித்தனர். 
பத்மநாபபுரம் அரண்மனை
தக்கலைக்கு அருகே பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. விடுமுறை நாட்களில் இந்த அரண்மனையை காண சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே போல் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து அரண்மனை அழகை கண்டு ரசித்தனர்.
இதேபோல் சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்ததை காண முடிந்தது.

Next Story