கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமயம்:
திருமயம் அருகே மெய்யபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் அப்பகுதியில் தனியார் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடந்தி வந்தனர். இதனிடையே கல்குவாரிக்கு செல்லும் வழியில் உள்ள வரத்து வாரியை கிராம மக்கள் நேற்று திடீரென பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரினர். இதனை அறிந்த தாசில்தார் பிரவீனா மேரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மக்கள் தூர்வாருவதை நிறுத்தும்படி கேட்டு கொண்டதோடு பொக்லைன் எந்திரத்தின் சாவியை பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காட்டுபாவா பள்ளிவாசல் கடைவீதியில் புதுக்கோட்டை- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் எங்கள் பகுதியில் அமைய இருக்கும் கல்குவாரியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினர். இதனை தொடர்ந்து தற்காலிகமாக கல்குவாரி அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story