ஓசூர் வழியாக கஞ்சா குட்கா கடத்தலை தடுக்க பார்டர் போலீஸ் கமாண்டோ படை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்


ஓசூர் வழியாக கஞ்சா குட்கா கடத்தலை தடுக்க பார்டர் போலீஸ் கமாண்டோ படை  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  தகவல்
x
தினத்தந்தி 4 April 2022 12:07 AM IST (Updated: 4 April 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் வழியாக கஞ்சா, குட்கா கடத்தலை தடுக்க "பார்டர் போலீஸ் கமாண்டோ" படை செயல்படுத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.

ஓசூர்:
ஓசூர் வழியாக கஞ்சா, குட்கா கடத்தலை தடுக்க "பார்டர் போலீஸ் கமாண்டோ" படை செயல்படுத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
நடைபயிற்சி பாதை
ஓசூரில் பொதுமக்கள் நடைபயிற்சி, சைக்கிளிங், ஜாகிங் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்து இல்லாத நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே, போக்குவரத்து இல்லா நடைபயிற்சி பாதையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பொதுமக்களுடன் அவர் மாநகராட்சி பூங்கா பகுதி வரை நடைபயிற்சி மேற்கொண்டார். 
பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓசூர் பகுதியில் மத்திகிரி ஜங்ஷன் முதல் அந்திவாடி ஸ்டேடியம் வரையிலும், தர்கா முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து வென்ட் இந்தியா கம்பெனி வரை உள்பட 5 இடங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவசர சேவைகளுக்கு விலக்கு
இந்த பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தாலும், ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் மற்றும் அவசர சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். ஓசூர் நகர பகுதியில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 4 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இருப்பார்கள். 
இதேபோல், போக்குவரத்தை பராமரிக்க 2 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு படையும், தலா 6 மணி நேரம் பணியாற்றுவார்கள். ஓசூர் வழியாக கஞ்சா, குட்கா பொருட்கள் மற்றும் ரேஷன் அரிசி ஆகியவற்றை கடத்தி செல்வதை தடுக்கும் வகையில், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை, பேரிகை, பாகலூர் ஆகிய பகுதிகளில் "கிருஷ்ணகிரி பார்டர் போலீஸ் கமாண்டோ" படை அடுத்த வாரம் முதல் செயல்படுத்தப்படும். குற்றங்களை தடுக்கவும், ரவுடியிசத்தை ஒழிக்கவும் போலீசார் தீவிரமாக பணியாற்றவேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story