வால்பாறை மலைப்பாதையில் பள்ளத்தில் பாய்ந்த கார் மரத்தில் மோதி நின்றதால் 4 பேர் உயிர் தப்பினர்


வால்பாறை மலைப்பாதையில் பள்ளத்தில் பாய்ந்த கார் மரத்தில் மோதி நின்றதால் 4 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 4 April 2022 12:07 AM IST (Updated: 4 April 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் மலைப்பாதை பள்ளத்தில் கார் பாய்ந்தது. அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் மோதி கார் நின்றதால் அதில் இருந்த 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

வால்பாறை

வால்பாறையில் மலைப்பாதை பள்ளத்தில் கார் பாய்ந்தது. அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் மோதி கார் நின்றதால் அதில் இருந்த 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

காரில் சுற்றுலா வந்தனர் 

மலைப்பகுதியான வால்பாறையில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

வால்பாறை மலைப்பகுதி 40 கொண்டைஊசி வளைவுகளை கொண்டது என்பதால், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கவனமாக வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக் (வயது 40) என்பவர் தனது 3 நண்பர்களுடன் காரில் வால்பாறை வந்தார். பின்னர் அவர்கள் 4 பேரும் வால்பாறையில் உள்ள சுற்றுலா மையங்களை பார்த்து மகிழ்ந்தனர். 

பள்ளத்தில் பாய்ந்தது

பிறகு அவர்கள் 4 பேரும் காரில் சென்னை புறப்பட்டனர். காரை கார்த்திக் ஓட்டினார். அவர்கள் வந்த கார் வால்பாறை மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. 

பின்னர் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு 100 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்தது. உடனே காருக்குள் இருந்த 4 பேரும் அய்யோ... அம்மா... என்று அலறினார்கள். அப்போது நல்ல வேளையாக அந்த கார் 7 அடி ஆழத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.

4 பேர் உயிர் தப்பினர்

இதன் காரணமாக காருக்குள் இருந்த 4 பேரும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காடம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காருக்குள் இருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றதும் அவர்கள் புறப்பட்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கவனமாக செல்ல வேண்டும்

இது குறித்து போலீசார் கூறும்போது, வால்பாறை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகள் அதிகம்  கொண்டது. இங்கு வெளியூரை சேர்ந்தவர்கள் காரை ஓட்ட கடினமாக இருக்கும். எனவே சுற்றுலா வரும் வெளியூரை சேர்ந்தவர்கள் வேகமாக வரக்கூடாது. மேலும் மலைப்பாதையில் அடிக்கடி பனிமூட்டம் நிலவி வருகிறது. அவ்வாறு ஏற்படும்போது சிறிது ேநரம் வாகனங்களை நிறுத்திவிட்டு பின்னர் செல்ல வேண்டும் என்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால், வால்பாறைக்கு விடுமுறை நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம்பேர் வந்து செல்கிறார்கள். அவர்கள் மலைப்பாதையில் வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் மலைப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டு, வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

Next Story