வன விலங்குகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்


வன விலங்குகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 4 April 2022 12:08 AM IST (Updated: 4 April 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் மக்கள் வன விலங்குகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் மக்கள் வன விலங்குகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வனவிலங்குகள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் மான்கள், குரங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து மான்கள், மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைக்கு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் வனப்பகுதியின் எல்லையில் இரும்பு கம்பியால் வேலி அமைக்கப்பட்டு உள்ளது. 

சில சமயங்களில் இரும்புவேலி வரை மான்கள் கூட்டமாக வருகை தருகின்றன. சமீப நாட்களாக கிரிவலத்திற்கு வரும் மக்கள் வன விலங்குகளான மான்கள், குரங்குகளுக்கு பிஸ்கெட், பன், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை  கொடுகின்றனர். 

கிரிவலப்பாதையில் பழனி ஆண்டவர் கோவில் உள்ள வனப்பகுதியில் காலை மற்றும் மதியத்தில் மான்கள் கூட்டமாக வந்து நிற்கின்றன.  அதேபோல் நேற்றும் மான்கள் அந்த பகுதியில் வந்து நின்றது. அவை மக்கள் கொடுக்கும் உணவு பொருட்களை தின்றப்படி அங்கேயே நின்று கொண்டிருந்தன.

செல்போனில் புகைப்படம்

இதனால் அவ்வழியாக வந்தவர்கள் மான்களை கண்டு அவர்களது செல்போனில் புகைப்பட எடுத்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை அலுவலர்கள் பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறினர். அதைத் தொடர்ந்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சென்று மான்களை விரட்டினர். 

பின்னர் வனத்துறையினர் கூறுகையில், ‘வன விலங்குகள் சுயமாக உணவை தேடும் பழக்கம் கொண்டவை. அவற்றிற்கு பொது மக்கள் உணவு பொருட்கள் வழங்கினால் அவை சுயமாக உணவை தேடாமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வர கூடும். 

வனவிலங்குகளுக்கு இட்லி, சாதம் போன்றவற்றை வழங்குகின்றனர். இது வேதனைக்குரிய செயலாகும். எனவே கிரிவலம் செல்லும் பொதுமக்கள் குரங்கு, மான்கள் போன்ற வன விலங்குகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்’ என்றனர்.

Next Story