எச்புதுப்பட்டியில் 44 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
எச்.புதுப்பட்டியில் 44 ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தர்மபுரி:
எச்.புதுப்பட்டியில் 44 ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
குட்டையில் ஆக்கிரமிப்பு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் எச்.புதுப்பட்டி பச்சை கவுண்டன் குட்டையில் ஏராளமான குடியிருப்புகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஆக்கிரமிப்பு நிலங்களை நில அளவீடு செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.
இதையடுத்து தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் பச்சை கவுண்டன் குட்டையில் ஆக்கிரமிப்புகள் குறித்து நில அளவீடு செய்தனர். நில அளவீட்டின்படி 44 பேர் குடியிருப்புகள் அமைத்தும், ஒருவர் விவசாய சாகுபடி செய்தும் ஆக்கிரமித்து இருப்பது கண்டறியப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புதாரர்களுக்கு தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளவில்லை. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அரூர் உதவி கலெக்டர் முத்தையன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பச்சை கவுண்டன் குட்டையில் இருந்த குடியிருப்புகள் மற்றும் விவசாய சாகுபடி ஆக்கிரமிப்பு முழுவதையும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story