தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 April 2022 12:18 AM IST (Updated: 4 April 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜேந்திரன்,  அகரம்சீகூர், பெரம்பலூர்.

கழிவுநீர் வாய்க்கால் மூடிகள் சரிசெய்யப்படுமா? 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலின் மேல் மூடிகள் சிதிலமடைந்து  பள்ளமாக உள்ளது. இதனால் சாலையோரம் நடந்து செல்பவர்கள் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் கால்வாயில் விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலின் மூடிகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கிருஷ்ணராயபுரம், கரூர். 

ஆபத்தான நிழற்குடை 
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கைக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள நிழற்குடை  நீண்ட நாட்களாக ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இதுகுறித்து  பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த நிழற்குடை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையில் பொதுமக்கள் நிற்கும் போது இவை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கைக்குறிச்சி, புதுக்கோட்டை. 

கூடுதலாக நகர பஸ் இயக்க வேண்டும் 
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் லாலாபேட்டை, பிள்ளபாளையம், கொம்பாடிபட்டி, பாலப்பட்டி, மத்திபட்டி, புணவாசிபட்டி, சிந்தலவாடி, மகிளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பகுதி மாணவ-மாணவிகள் பள்ளி சென்று வர போதிய நகர பஸ் வசதி இல்லை. இதனால் அவர்கள் குறித்த  நேரத்திற்கு பள்ளி சென்று வர பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், லாலாபேட்டை, கரூர். 

நோய் தொற்று பரவும் அபாயம் 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி, கச்சேரி வீதியில் உள்ள ஒரு மெடிக்கலின் அருகே தனியாருக்கு சொந்தமான காலி இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் நாளொன்றுக்கு ஏறக்குறைய ஆயிரம் பேர் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அருகில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களிலும், சாலையில்  அந்த இடத்தை கடந்து செல்பவர்களும் கடுமையான துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். இதனால் கடுமையான தொற்று நோய் ஏற்பட  அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கறம்பக்குடி, புதுக்கோட்டை. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டியில் குஜிலியம்பாறை பிரிவு சாலை ஓரத்தில் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தரகம்பட்டி, கரூர்.

குறைந்த மின் அழுத்தம் சரிசெய்யப்படுமா? 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போசம்பட்டி, ராஜா நகர் மற்றும் மெயின் ரோட்டில் இரவுபகல் எந்நேரமும் குறைந்த மின் அழுத்தமும், தொடர் மின்வெட்டும் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ராஜா நகர், திருச்சி.

ஆபத்தான மின்கம்பம் 
திருச்சி கே.கே.நகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையின் ஓரத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கிருஷ்ணமூர்த்தி நகர், திருச்சி.

எரியாத மின் விளக்குகள் 
திருச்சி மாநகராட்சி 39-வது வார்டு பாத்திமாபுரம் 3, 4, 5 ஆகிய தெருக்களில் நிறைய தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி பெண்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
அப்துல் ரஹ்மான்,  பாத்திமாபுரம், திருச்சி.

சிதிலமடைந்த நிழற்குடை 
திருச்சி மாநகராட்சி இச்சிகாமாலைபட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் சென்று வர இச்சிகாமாலைபட்டியில்  நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து இருக்கைகள் இல்லாமலும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் இந்த நிழற்குடையில் பொதுமக்கள் நிழலுக்காக நிற்கும்போது இந்த நிழற்குடை  இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்த இந்த நிழற்குடையை  அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  இச்சிகாமாலைபட்டி, திருச்சி.

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார்கோவில் கிராமம், கீழத்தெரு செல்லும்  தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது சேதமடைந்தது ஜல்லிகற்கள்  பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினேஷ், பிச்சாண்டார் கோவில், திருச்சி. 


Next Story