கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகன் அரவிந்தன் (வயது 21). கூலிதொழிலாளியான இவர் நேற்று மதியம் அதே கிராமத்தில் சுசிலா என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கிணற்றுக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது கிணற்றின் அருகே அரவிந்தனின் ஆடைகள் மற்றும் காலணி கிடந்தது. ஆனால் அரவிந்தனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரவிந்தனை மீட்க கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது அவர் கிணற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அவருடைய உடலை மீட்டனர்.
இதையடுத்து, பெரம்பலூர் போலீசார் அரவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்து போன அரவிந்தனுக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றின் ஓரத்தில் இருந்து குளிக்கும் போது, தவறி உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story