தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குறைந்த மின் அழுத்தம் சரிசெய்யப்படுமா?
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போசம்பட்டி, ராஜா நகர் மற்றும் மெயின் ரோட்டில் இரவுபகல் எந்நேரமும் குறைந்த மின் அழுத்தமும், தொடர் மின்வெட்டும் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ராஜா நகர், திருச்சி.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி கே.கே.நகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையின் ஓரத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கிருஷ்ணமூர்த்தி நகர், திருச்சி.
எரியாத மின் விளக்குகள்
திருச்சி மாநகராட்சி 39-வது வார்டு பாத்திமாபுரம் 3, 4, 5 ஆகிய தெருக்களில் நிறைய தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி பெண்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
அப்துல் ரஹ்மான், பாத்திமாபுரம், திருச்சி.
சிதிலமடைந்த நிழற்குடை
திருச்சி மாநகராட்சி இச்சிகாமாலைபட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் சென்று வர இச்சிகாமாலைபட்டியில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து இருக்கைகள் இல்லாமலும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் இந்த நிழற்குடையில் பொதுமக்கள் நிழலுக்காக நிற்கும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்த இந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இச்சிகாமாலைபட்டி, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார்கோவில் கிராமம், கீழத்தெரு செல்லும் தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது சேதமடைந்தது ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினேஷ், பிச்சாண்டார் கோவில், திருச்சி.
Related Tags :
Next Story