பெண் டாக்டர் வீட்டில் 90 பவுன் நகை ரூ.1½ லட்சம் கொள்ளை


பெண் டாக்டர் வீட்டில் 90 பவுன் நகை ரூ.1½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 4 April 2022 12:46 AM IST (Updated: 4 April 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பெண் டாக்டர் வீட்டில் 90 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பெண் டாக்டர் வீட்டில் 90 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்  தேடி வருகிறார்கள். 
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் டாக்டர்
நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அருகே மேற்கு லுத்தரன் தெருவை சேர்ந்தவர் அமலகுமார். இவருடைய மனைவி ஜலஜா தேவகுமாரி (வயது 59), டாக்டர். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.  இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கணவரும், மகனும் இறந்து விட்டனர். இதனால் வீட்டில் ஜலஜா தேவகுமாரி தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல பணிக்கு புறப்பட்டு சென்று விட்டார். பணி முடிந்து நேற்று காலை 8 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜலஜா தேவகுமாரி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோ பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் அறை முழுவதும் சிதறி கிடந்தன.
நகை-பணம் கொள்ளை
மேலும் பீேராவில் வைத்திருந்த 90 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கத்தை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தடயங்கள் ஏதும் விட்டு சென்றுள்ளனரா? என்று வீடு முழுவதும் போலீசார் ஆய்வு செய்தனர். அதோடு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
டாக்டரான ஜலஜா தேவகுமாரி இரவு வேலைக்கு செல்வதை அறிந்த யாரோ மர்மநபர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
நகை மற்றும் பணம் கொள்ளை போன டாக்டர் வீட்டின் பக்கத்து வீட்டின் முன் சாலை ஓரம் ஒரு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பெண் டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-----------

Next Story