மகன், மருமகளிடம் இருந்து சொத்தை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைக்க வேண்டும்-போலீஸ் கமிஷனருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மகன், மருமகளிடம் இருந்து சொத்தை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மகன், மருமகளிடம் இருந்து சொத்தை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மூதாட்டி வழக்கு
மதுரையை சேர்ந்த பிச்சையம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனக்கு சொந்தமாக மதுரை கோரிப்பாளையம் ஜம்புராபுரம் ரோடு பகுதியில் ஒரு சொத்து இருந்தது. இந்த சொத்தை எனது மகன் பெயருக்கு மாற்றப்பட்டது. தற்போது எனக்கு 69 வயதாகிறது. ஆனால் எனது மகன் என்னை முறையாக பாதுகாப்பதில்லை.
எனவே என்னுடைய சொத்தை என் மகனிடம் இருந்து மீட்டுத்தரும்படி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவின் அடிப்படையில் என்னுடைய சொத்தை மீண்டும் ஒப்படைக்கும்படி கடந்த 12.11.2021 அன்று மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார். ஆனால் தற்போது வரை அந்த சொத்து என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை.
நடவடிக்கை இல்லை
மாறாக எனது மகன், மருமகள் ஆகியோர் என்னை பல்வேறு வகையில் தொந்தரவு செய்து வருகின்றனர். இதையடுத்து எனது சொத்தை மீட்டுத்தரும்படியும் எனக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், தல்லாகுளம் போலீசாருக்கு புகார் மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே என்னுடைய சொத்தை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் என்னிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
போலீஸ் கமிஷனருக்கு உத்தரவு
முடிவில், மனுதாரர் தனது சொந்த மகனால் துன்புறுத்தப்படுவதாலும், அவர் முதியவர் என்பதாலும் அவரை மீட்க வேண்டிய தேவை இந்த கோர்ட்டுக்கு உள்ளது. அந்த வகையில் மனுதாரருக்கு சொந்தமான சொத்தில் இருந்து அவரது மகன், மருமகளை 4 வாரத்தில் வெளியேற்றி, சொத்தை அவர்களிடம் இருந்து மீட்டு மனுதாரரிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story