கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அபராதம்
கோவில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை,
கோவில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு...
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் குலமங்கலம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வருகிற 5, 6-ந்தேதிகளில் கரகாட்டம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சிகளை நடத்தவும், அதற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, திருவிழாக்களில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை கடந்த 2017-ம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்து உள்ளது. அதன்படி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
அபராதம்
நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளின்போது ஆபாசம் இருக்கக்கூடாது. இந்த கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆனாலும் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும்.
மேலும், மனுதாரர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சம்பந்தப்பட்ட நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்த அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதே போல பல்வேறு கோவில் திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த திருச்சியை சேர்ந்த மாதவன், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனோகர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், தேனி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து இதே நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story