சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்- வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தகவல்


சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்- வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தகவல்
x
தினத்தந்தி 4 April 2022 2:13 AM IST (Updated: 4 April 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

தென்னையில் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
தென்னையில் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தெரிவித்து உள்ளார்.
சிவப்பு கூன் வண்டு
தென்னையில் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் காரணமாக மகசூல் அதிகமாக பாதிக்கப்படுகிறது. அனைத்து தென்னை மரங்களிலும் தாக்குதல் அதிகமாக காணப்பட்டாலும், 20 வயதுக்குள் உள்பட்ட மரங்களையே அதிகமாக தாக்குகிறது. மேலும், காண்டாமிருக வண்டு மற்றும் குருத்தழுகல் நோய் தாக்கிய மரங்களில் சிவப்பு கூன் வண்டு தாக்குதலும் அதிகமாக காணப்படும்.
இந்த வண்டுகள் முட்டைகளை மரத்தின் தண்டில் உள்ள வெடிப்புகளில் இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுவானது குருத்து மற்றும் தண்டு பகுதிகளில் உள்ள மிக மென்மையான திசுக்களை தின்று சக்கைகளை துவாரத்தின் வழியே வெளியே தள்ளுகின்றன. பாதிக்கப்பட்ட மரத்துவாரத்தின் வழியே பழுப்பு நிற திரவம் வெளியே வந்து கொண்டு இருக்கும். இது தென்னை மரம் மட்டுமின்றி பனை மரத்தையும் தாக்குகிறது.
இந்த வண்டு பழுப்பு நிறம் கலந்த சிவப்பு நிறமாகவும், முதுகு பகுதியில் 6 கருப்பு நிற புள்ளிகளும் இருக்கும். இதன் புழு வெளிறிய மஞ்சள் நிறத்திலும், தலை சிவப்பு நிறத்திலும் கால்கள் இல்லாமலும் காணப்படும். வண்டுகளின் ஆயுட்காலம் 4 மாதங்களாகும்.
மேலாண்மை முறைகள்
தோப்புகளில் இடி விழுந்து பராமரிப்பு இல்லாமல் காய்ந்து போன மரங்களை வேரோடு அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். மரங்களில் காயம் எதுவும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். தண்டு பகுதியில் துளைகள் இருந்தால் அதன்மீது சிமெண்டு கலவை கொண்டு மூட வேண்டும். பச்சை மட்டைகள் வெட்டுவதை தவிர்க்க வேண்டும். வெட்டுவதாக இருந்தால் தண்டில் இருந்து 120 சென்டி மீட்டர் தள்ளி வெட்ட வேண்டும்.
நுனி, நடுக்குருத்து மற்றும் மட்டை இடுக்குகளில் வேப்பங்கொட்டை தூள், மணல் கலவையை 1:2 முறையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை வைப்பதினால் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்பு கூன் வண்டு முட்டையிடுவதையும் தடுக்கலாம்.
2 ஹெக்டேருக்கு ஒரு இனக்கவர்ச்சி பொறியை வைத்து கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். 2½ கிலோ கரும்பு மொலாசஸ், 5 கிராம் ஈஸ்டு, 5 மில்லி லிட்டர் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றுடன் நீளவாக்கில் வெட்டப்பட்ட இளம் மட்டை தண்டுகள் போடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
வேர் மூலம் மருந்து செலுத்துவதற்கு 10 மில்லி லிட்டர் மோனோகுரோட்டோபாஸ், 10 மில்லி லிட்டர் தண்ணீர் கலவையை பாலித்தீன் பையில் ஊற்றி பென்சில் தடிமன் அளவு கொண்ட வேரை தேர்வு செய்து அதை பையில் நுழைத்து இறுக்கமாக கட்டி வைக்க வேண்டும்.
இந்த தகவலை டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தெரிவித்து உள்ளார்.

Next Story