ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 4 April 2022 2:23 AM IST (Updated: 4 April 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதே நேரத்தில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்காடு:-
ஏற்காட்டில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதே நேரத்தில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் லேடிஸ்சீட், ஜென்ஸ்சீட், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி, அண்ணா பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர். 
ஏற்காடு அண்ணா பூங்காவில் கோடைவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அவற்றை கண்டு மகிழ்ந்தனர். மேலும் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டாலும், அவ்வப்போது வந்து சென்ற மேகமூட்டத்தால் சற்று குளிர்ச்சி நிலவியது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதனிடையே ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலைஓரங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து நடத்தப்பட்டு வந்தன. இந்த கடைகளால் ஏற்காடு ஏரி மற்றும் அண்ணா பூங்கா மறைக்கப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்ப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. 
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக கடைகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த கடைகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர். ஒரு சில சாலையோர கடைகளைஅவர்களாகவே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தி கொண்டனர். மீதம் உள்ள கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். 
இந்த நிலையில் நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததை அறிந்து மீண்டும் அதே இடத்தில் கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டன. இதையறிந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர். மேலும் தொடர்ந்து கடைகள் அப்பகுதியில் வைக்கப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு நிலவியது.
வாகனங்களை நிறுத்த மாற்று இடம்
சாலையோர கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்காடு ஏரியின் அழகை சுற்றுலா பயணிகள் நேற்று காலையில் வெகுவாக கண்டு மகிழ்ந்தனர். ஆனால் மாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் அதற்கு பதிலாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், ஏரியின் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியவில்லை. எனவே இந்த வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் ஏரியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story