தக்கலை பேட்டை சந்தையில் வாழை தார் விற்பனை நேரம் மாற்றியமைப்பு


தக்கலை பேட்டை சந்தையில்  வாழை தார் விற்பனை நேரம் மாற்றியமைப்பு
x
தினத்தந்தி 4 April 2022 2:50 AM IST (Updated: 4 April 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை பேட்டை சந்தையில் வாழை தார் விற்பனை நேரம் மாற்றியமைப்பு

தக்கலை, 
பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தக்கலை பேட்டை சந்தை உள்ளது. இந்த சந்தையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காய்கறி வியாபாரமும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் வியாபாரமும் நடைபெறுவது வழக்கம். 
இதன்படி வாழைத்தார் வியாபாரம் மாலை 4 மணிக்குதான் தொடங்கும். அதுவரை சந்தை வாசல் சாத்தப்பட்டிருக்கும். வாழைத்தார்களை கொண்டு செல்லும் விவசாயிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வியாபாரிகளும், பொதுமக்களும் வாழை தார்கள் வாங்க அனுமதிக்கப்படுவதில்லை. 
இந்த நடைமுறையை கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒரே நேரத்தில் அதிகமாக மக்கள் கூடுவதை தவிர்க்க காலையிலிருந்தே வாழைத்தார்கள் வந்தவுடன் வியாபாரிகளும் பொதுமக்களும், வாங்கி செல்லலாம் என மாற்றப்பட்டது. இந்த நடைமுறையால் வாழை தார்களின் விலையை நிர்ணயம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆகவே புதிய நடைமுறையை மாற்றிவிட்டு முன்பு இருந்ததை போன்று சந்தைகூடும் நேரத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் நகரசபை தலைவர் அருள் சோபனிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் முந்தைய நடைமுறைப்படி வாழைத்தார் வியாபாரம் தொடங்கும் நேரம் மாலை 4 மணியாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுகிழமை 4 மணிக்கு தொடங்கிய சந்தையில் வாழைத்தார்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. அதிலும் நேந்திரன் தாரின் வரத்து குறைவாக இருந்ததால் ஒரு காய் ரூ.12 க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story