எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல பரிசீலனை
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல பரிசீலனை செய்யப்படுகிறது.
திருச்சி:
கோரிக்கை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் தொழிற்பேட்டைகள் உள்ளன. மத்திய அரசு நிறுவனமான பாய்லர் ஆலையும் இதே பகுதியில்தான் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லாத நிலை உள்ளது. எனவே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து மத்திய ரெயில்வே மந்திரிக்கு திருவெறும்பூரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டிய அவசியம் குறித்து தகவல் கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் அங்குள்ள ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை நிறுத்தி செல்வதா? அல்லது வேண்டாமா? என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பரிசீலனை
குறிப்பாக அரியமங்கலத்தில் இருந்து துவாக்குடி வரை திருவெறும்பூர் பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், தினமும் ஏராளமான பொதுமக்கள் அந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருவதாலும், அங்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களை நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவெறும்பூர் பகுதி மக்கள் வெளியூர்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் செல்ல வேண்டுமானால் அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்து தான் செல்ல வேண்டும். அதற்கு மாறாக, திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று சென்றால் அந்த பகுதி மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story