சிக்கராயபுரம் கல் குவாரியில் மண் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை


சிக்கராயபுரம் கல் குவாரியில் மண் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 4 April 2022 8:57 PM IST (Updated: 4 April 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

சிக்கராயபுரம் கல் குவாரியில் மண் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்ற போது அங்கு அள்ளகூடிய மண்ணை கொண்டு வந்து சிக்கராயபுரம் கல்குவாரியில் கொட்டி அதனை மூடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிளில் கொட்ட வேண்டாம் என கை விடப்பட்ட நிலையில், இந்த இடத்தில் ஒரு பகுதியில் மண் மேடாக காட்சி அளித்து வருகிறது. மேலும், கோடை காலத்தில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து சென்னை மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. 

மிக பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்த நிலையில், தற்போது இந்த நீர்பிடிப்பு பகுதியில் சிக்கராயபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை டன் கணக்கில் மண்ணை கொட்டி மூடி வந்தனர். இந்நிலையில், இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு நேரங்களில் பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளில் இங்கு கொட்டப்பட்டுள்ள மண்ணை லாரிகளில் திருட்டுதனமாக எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும், இதனை தடுக்க எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தற்போது கல் குவாரிக்கு செல்லும் ஒரு வழித்தடத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் அந்த வழிகளில் பள்ளம் வெட்டி தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாற்று பாதையில் சென்று இரவு நேரத்தில் மண் அள்ள கூடும் எனவும், இதனை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story