பெங்களூருவில் ஆசிரியையிடம் நகை பறித்த வாலிபர்; 2 மணி நேரத்தில் கைது
பெங்களூருவில் ஆசிரியையிடம் நகை பறித்த வாலிபரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு பகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சசிகலா. இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு சசிகலா நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒருவர், சசிகலாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு ஓடினார். இதனால் அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் அங்கு வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதற்கிடையில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பேலீசார், சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அவ்வாறு பிடித்து விசாரித்த போது ஒரு வாலிபர் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். மேலும் அவரிடம் சோதனை நடத்திய போது தங்க சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சசிகலாவிடம் அந்த வாலிபர் தான் தங்க சங்கிலி பறித்ததும் தெரிந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது பெயர் நிதிலேஷ் (வயது 20) என்பதும், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கைதான நிதிலேஷ் மீது பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தங்க சங்கிலி பறிப்பு நடந்த 2 மணிநேரத்தில் வாலிபரை ரோந்து போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story