சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
விவசாய பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்துவிட்டார்.
தண்டராம்பட்டு
விவசாய பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்துவிட்டார்.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. இதில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.
அணையின் இடது மற்றும் வலதுபுற பாசன கால்வாய்கள் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதி ஆகிய இடங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன. இதேபோல் 105 ஏரிகளும் நீராதாரங்களை பெற்று வருகிறது.
இவை தவிர திருவண்ணாமலை, தானிப்பாடி, சாத்தனூர், புதுப்பாளையம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு சாத்தனூர் அணை நீர் சப்ளை செய்யப்படுகிறது.
புதுப்பிக்கும் பணி
இந்த ஆண்டு தேவைக்கு அதிகமான பருவ மழை பெய்தாலும் அணையில் மதகுகளுக்கு புதிய இரும்பு ஷட்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் 99 அடி உயரத்திற்கு மட்டுமே நீரை தேக்க முடிந்தது.
எனவே நேரடி பாசனத்திற்கு சாத்தனூர் அணை நீரை திறந்து விட முடியாத நிலை இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பயிரிடப்பட்ட விளைநிலங்கள் கோடை வெப்பத்தால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அணையின் நீரை பாசனத்திற்கு திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.
அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
அதன்படி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய் தண்ணீரை மலர் தூவி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் நலன்கருதி சாத்தனூர் அணை தண்ணீரை திறக்க முதல்-அமைச்சர் எனக்கு அனுமதி வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் வாக்குறுதியில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினோம். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிற அரசாக இந்த அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
சாத்தனூர் அணையை பொருத்தவரை தற்போது 97.50 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் உள்ளதால் முழுமையாக நேரடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
12,543 ஏக்கர் நிலங்கள் பயனடையும்
இருப்பினும் ஏரிகள் மூலம் விவசாய நிலங்களை காப்பதற்காக 45 நாட்களுக்கு வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 140 கனஅடி நீரும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 160 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
இதன் மூலம் 12 ஆயிரத்து 543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற உள்ளன. மேலும் 105 ஏரிகளுக்கு நீர் ஆதாரங்கள் கிடைக்கும். அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பங்கேற்றவர்கள்
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், உதயசூரியன், வசந்த்கார்த்திக், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கூடுதல் கலெக்டர் பிரதாப், நீர்வளத்துறை செயற் பொறியாளர் வி.சாம்ராஜ், முன்னாள் எம்.பி. வேணுகோபால், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம், கோ.ரமேஷ், கோவிந்தன் தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், திருமலை கன்ஷக்சன்ஸ் ஜெ.மெய்கண்டன், அருணை கன்ஸ்ட்ரக்சன் துரை.வெங்கட் மற்றும் பிரியா விஜயரங்கன், வக்கீல் கதிரவன், பாசன சங்க தலைவர் ஜெயராமன், இயற்கை விவசாயிகள் இயக்கத்தின் மாநில பொது செயலாளர் எஸ்.ஆர்.ஜாகிர் ஷா மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story