சட்டவிரோத செயல்களை தடுப்பதே எனது முதன்மையான நோக்கம்


சட்டவிரோத செயல்களை தடுப்பதே எனது முதன்மையான நோக்கம்
x
தினத்தந்தி 4 April 2022 10:28 PM IST (Updated: 4 April 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் சட்டவிரோத செயல்களை தடுப்பதே எனது முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு எம்.என்.நிஷா கூறினார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் சட்டவிரோத செயல்களை தடுப்பதே எனது முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு எம்.என்.நிஷா கூறினார்.
போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சுகுணாசிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக எம்.என்.நிஷா புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அப்போது அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வசந்தராஜ், லாமேக் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
 அதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்ட எம்.என்.நிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
புதிதாக தொடங்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த மாவட்டத்தில் போலீசாருக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் கொண்டுவர முயற்சி செய்வேன்.
சட்டவிரோத செயல்கள்
இந்த மாவட்டத்தில் மீனவர் பிரச்சினை உள்பட சில முக்கிய பிரச்சினைகள் இருப்பதை அறிந்துள்ளேன். அந்த பிரச்சினைகளை தீர்க்க முழு கவனம் செலுத்துவேன். சட்டவிரோத செயல்களை தடுப்பதே எனது முதன்மையான நோக்கமாக இருக்கும். 
பொதுமக்கள், போலீசாரை எளிதாக அணுகும் வகையில் போலீஸ் நிலையங்கள் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு உதவி செய்யத்தான் போலீசார் இருக்கின்றனர். எனவே, பொதுமக்கள் அச்சமின்றி போலீஸ் நிலையங்களுக்கு வந்து தங்கள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story