பேரளம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த வாலிபர் பரிதாப சாவு
பேரளம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நன்னிலம்:-
பேரளம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
போலீசில் புகார்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள மானந்தங்குடி அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(வயது 32). டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ செலவிற்காக அவருடைய மனைவி சுதாவின் சகோதரன் பிரசாந்த் என்பவர் பணம் கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை திருப்பி தராததால், சுதாகர் வீட்டுக்கு சென்று பிரசாந்த் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுதாகர் மனைவி சுதா பேரளம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்தவர் சாவு
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி சுதாகர் தனது குடும்பத்துடன் பேரளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது போலீஸ் நிலையம் முன்பு நின்றிருந்த சுதாகர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த அவரை போலீசார் மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story