ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டதால் பரபரப்பு
மயிலாடுதுறை அருகே பிரச்சினைக்குரிய இடத்தில் ஈமக்கிரியை மண்டபம் கட்டு்ம் பணியை பொதுமக்கள் மீண்டும் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசப்படுத்தினர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே பிரச்சினைக்குரிய இடத்தில் ஈமக்கிரியை மண்டபம் கட்டு்ம் பணியை பொதுமக்கள் மீண்டும் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசப்படுத்தினர்.
ஈமக்கிரியை மண்டபம்
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சி மஞ்சள் வாய்க்கால் கரை பகுதியில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பணி சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு அதிகாரிகள் தரப்பில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பான சமரச பேச்சுவார்த்தை கூட்டம் தற்போதுவரை நடைபெறவில்லை.
மீண்டும் பணி தொடங்கியது
இதனால், விரக்தி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிரச்சினைக்குரிய இடத்தில் தாங்களாகவே ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணியை நேற்று மாலை தொடங்கினர். தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்ட பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் தரப்பில், வருகிற 8-ந்தேதி(வெள்ளிக்கிழமை) இருதரப்பினரையும் அழைத்துப்பேசி இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணியை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story