கண்ணபுரம் சந்தையில் குவிந்த 4 ஆயிரம் மாடுகள்


கண்ணபுரம்  சந்தையில் குவிந்த 4 ஆயிரம் மாடுகள்
x
தினத்தந்தி 4 April 2022 11:10 PM IST (Updated: 4 April 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் மாட்டுச்சந்தை கூடியது. இங்கு 4 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தன.

வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் மாட்டுச்சந்தை கூடியது. இங்கு 4 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தன.
 கண்ணபுரம் மாட்டுச்சந்தை
வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், சித்ரா பவுர்ணமியை யொட்டி விக்கிரம சோழீஸ்வர் சாமி கோவில் தேர் திருவிழாவும் நடைபெறும். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மாட்டுச்சந்தை  நடைபெறும். இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். விவசாயிகள் வாங்கியும் செல்வார்கள். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா  வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.  16- ந் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
4 ஆயிரம் மாடுகள்
இந்த நிகழ்ச்சியையொட்டி இந்த ஆண்டு முன்னதாகவே இந்த மாதம் 1-ந் தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத் தொடங்கி விட்டது.  இந்த மாட்டுச் சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 4 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் வந்து தங்களுக்கு பிடித்த நாட்டு மாடு, கன்று குட்டி, காளைகளை வாங்கிச் செல்கிறார்கள்.

Next Story