வாகனங்களில் டீசல் திருடியவர் கைது
கீழ்பென்னாத்தூரில் தார் சாலை போடும் பணிக்கு பயன்படுத்தும் வாகனங்களில் டீசல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கீழ்பென்னாத்தூர், ஏப்.5-
திண்டிவனம்-கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை போடும் பணி நடந்து வருகிறது. அதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்ற முருகன் (வயது 37) சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். தார் சாலை போடும் பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் அடிக்கடி டீசல் திருட்டுப் போவதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று டீசல் திருட்டை கண்டுபிடிப்பதற்காக சாலை போடும் பணிக்காக பயன்படுத்தும் பொக்லைன் எந்திரத்தை கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரி பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர். சற்று தொலைவில் சூப்பர்வைசர் கருப்பையா மற்றும் சாலை போடும் பணியில் ஈடுபட்டு வரும் பிலிப்ராஜா, நவீன் ஆகியோர் மறைவாக நின்று கண்காணித்தனர்.
35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பிளாஸ்டிக் கேன்களில் பொக்லைன் எந்திரத்தில் இருந்து டீசலை மர்மநபர்கள் திருடிக்கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 3 பேரும் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.
பிடிபட்டவர் கரிக்கலாம்பாடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்றும், தப்பியோடியவர்கள் கரிக்கலாம்பாடியைச் சேர்ந்த ஏழுமலை, சின்னராசு, சத்யராஜ் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை கீழ்பென்னாத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story